அஹம்மது நிருபம் (#11448)

*“அன்றாடக் கட்டாயப் பிரார்த்தனைகளான இவற்றுடன் நீண்ட கட்டாயப் பிரார்த்தனை, அஹம்மதுவின் நிருபம் போன்ற சில குறிப்பிட்ட பிரார்த்தனைகள் பஹாவுல்லாவினால் ஒரு விசேஷ சக்தியும் முக்கியத்துவமும் அளிக்கப்பட்டுள்ளன. அதனால் அவ்வாறே அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு ஐயத்திற்கிடமற்ற நம்பிக்கையுடனும் மாறாப் பற்றுறுதியுடனும் நம்பிக்கையாளர்களால் அவை கூறப்பட வேண்டும்; அதனால் அவற்றின் மூலமாக, அவர்கள் இறைவனுடனான தொடர்புறவில் மேலும் அணுக்கமான முறையில் அவருடன் தொடர்பு கொள்வதுடன், அவரின் சட்டங்களுடனும் கட்டளைகளுடனும் இன்னும் முழுமையாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.” 

— ஷோகி எஃபெண்டியின் சார்பில் எழுதப்பட்ட ஒரு கடிதத்திலிருந்து 

அரசரும், எல்லாம் அறிந்தவரும், விவேகியும் அவரே! இதோ, நித்தியம் என்னும் விருட்சத்தின் சிறு கிளைகளின் மீதமர்ந்து, விண்ணுலக இராப்பாடி, தெய்வீக, இனிய, கீதங்கள் எழுப்பி, உண்மையானவர்களுக்கு, இறைவனின் அருகாமையெனும் நற்செய்தியினைப் பிரகடனஞ் செய்து, தெய்வீக ஒருமைத் தன்மையின் நம்பிக்கையாளர்களைத், தாராளக் குணமுடை-யோனின் முன்னிலை என்னும் அரசவையின்பால் அழைத்து, பற்றறுத்தோருக்கு, இறைவனால், அரசனால், ஒளிமயமானவரினால், ஒப்பற்ற வரினால், வெளிப்படுத்தப்பட்ட செய்தியினை அறிவித்து, அன்பர்களைப் புனிதத் தன்மை என்னும் பீடத்தின்பால், இப்பிரகாசமிகு அழகின்பால், வழி நடத்திச் செல்கின்றது. 

மெய்யாகவே, எவர் மூலமாக, தவறிலிருந்து உண்மை பிரித்தறியப்படுகின்றதோ, ஒவ்வொரு கட்டளையின் விவேகமும் சோதிக்கப்படுகின்றதோ, அவரே, எல்லாத் தூதர்களின் நூல்களிலும் முன்கூறப்பட்டுள்ள இவ்வதிபெரும் அழகானவர். மெய்யாகவே, அவரே, உயரிய, சக்திமிக்க, மகத்தான, இறைவனின் கனிகளைக் கொண்டு வரும், உயிர் விருட்சம். 

அஹம்மதுவே! மெய்யாகவே அவரே கடவுள் என்பதற்கும், அரசரும், பாதுகாப்பாளரும், ஒப்பற்றவரும், எல்லாம் வல்லவரும் ஆகிய அவரைத் தவிர கடவுள் வேறிலர் என்பதற்கும், நீ, சாட்சியம் அளிப்பாயாக. மேலும், எவரது கட்டளைகளுக்கு நாமெல்லாரும் அடிபணி-கின்றோமோ, அவர், அலி, என்ற பெயருடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அவர், உண்மையாகவே இறைவனிடம் இருந்து வந்தவராவார். 

கூறுவீராக: மனிதர்களே, விவேகியும், ஒளிமய மானவருமான அவரால், பாயானில் கொடுக்கப்-பட்டுள்ள இறைவனின் விதிகளுக்குக் கீழ்ப்படியுங்கள். உண்மையாகவே அவர்தான் தூதர்களுக்கெல்லாம் மன்னர்; மெய்யாகவே, நீ இதனை அறிந்திடுவாயாயின், அவரது நூலே நூல்களுக்கெல்லாம் தாய்நூலாகும். 

அவ்வாறுதான், இவ்விராப்பாடி, இச்-சிறையிலிருந்து அவரின் அழைப்பை விடுக்கின்றது. அவர் இத்தெளிவான செய்தியினை வழங்க வேண்டியதுதான். யாரொருவர் விரும்பாதாரோ, அவர் இவ்வறிவுரையிலிருந்து அப்பால் திரும்பட்டும்; விரும்பியவர் அவரது பிரபுவின்பால் செல்லும் வழியைத் தேர்ந்தெடுக்கட்டும். 

மனிதர்களே, இவ் வசனங்களை நிராகரித்தீரென்றால், எவ்வித ஆதாரத்தைக் கொண்டு நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை வைத்திருக்கின்றீர்? அதனைக் காண்பியுங்கள், போலிக் கூட்டத்தினரே. 

இல்லை, எவரது கைகளில் எனது ஆன்மா இருக்கின்றதோ, அவர்மேல் ஆணை, அவர்களால் முடியாது, ஒருவர் மற்றொருவருக்கு உதவும் பொருட்டு ஒன்று சேர்ந்திடினும், இதனை அவர்கள் செய்யவே இயலாது. 

அஹம்மதுவே! யாம் உன்முன் இல்லாதபோது எமது அருட்கொடைகளை மறந்து விடாதே. உனது நாள்களில் எமது நாள்களையும், இத்தூரச் சிறையினில் எமது துன்பங்களையும், நாடு கடத்தலையும், நினைவு படுத்திக்கொள். எமது அன்பில் உறுதியாயிரு. எதிரிகளின் வாள்கள் உன்மீது மழைபோல் தாக்குதலைச் சொரிந்தபோதும், விண்ணுலகும் மண்ணுலகும் உன்னை எதிர்க்க எழுந்தபோதும், எம்பால் உறுதியாய் இருப்பாயாக, அதனால் உனது உள்ளம் தடுமாறாது இருக்கக் கூடும். 

எனது பகைவர்களுக்கு ஒரு தீச் சுடராகவும் எனது அன்பர்களுக்கு ஒரு நித்திய ஜீவ நதியாகவும் இருப்பாயாக, ஐயுறுவோரில் ஒருவனாகி விடாதே. 

எம் வழியில் உனக்குத் துன்பங்கள் நேரினும், எம் பொருட்டு தாழ்வு வரினும், கலக்கமுறாதே. 

இறைவனில், உனது இறைவனில், உனது முன்னோர்களின் பிரபுவில், நம்பிக்கை வைப்பாயாக. ஏனெனில் மனிதர்கள் தங்களின் சொந்தக் கண்களைக் கொண்டு கடவுளைக் கண்ணுறும் தன்மையையும், தங்களின் சொந்தச் செவிகளைக் கொண்டு அவரின் கீதங்களைக் கேட்கும் தன்மையையும் இழந்து, மாயை என்னும் பாதையில் அலைந்து கொண்டிருக்கின்றனர். நீ அவர்களைக் கண்ணுறுவது போன்றே, யாமும் அவர்களைக் கண்ணுற்றோம். 

அவ்வாறுதான் அவர்களின் மூட நம்பிக்கைகள், அவர்களுக்கும் அவர்களின் உள்ளங்களுக்கும் இடையே திரைகளாகி, அவர்களை, மேன்மையான, உயரிய, இறைவனின் வழியில் செல்ல விடாமல் தடுத்து விட்டுள்ளன. 

மெய்யாகவே, இவ்வழகிலிருந்து அப்பால் திரும்பிடும் ஒருவன் கடந்த காலத் தூதர்களிடமிருந்தும் அப்பால் திரும்பி, நித்தியம் முதல் நித்தியம் வரை இறைவன்பால் கர்வம் காட்டுபவன் என்பதை, நீ உன்னுள் உறுதியாக நம்புவாயாக. 

அஹம்மதுவே, இந் நிருபத்தை நன்குக் கற்பாயாக. உனது நாள்களில் அதனை ஓதுவாயாக, அதிலிருந்து உன்னை விலக்கிக் கொள்ளாதே. ஏனெனில், மெய்யாகவே, அதனை ஓதிடும் ஒருவருக்கு இறைவன், நூறு உயிர்த் தியாகிகளுக்கான சன்மானத்தையும், இரு உலகங்களில் சேவையையும் நியமித்துள்ளார். அதனால், நீயும் எம்மிடம் நன்றியுடையோருள் ஒருவனாக இருக்கக் கூடும் என்பதற்காக, இவ்வருள்பாலிப்புகளை, யாம் உன் மீது, எம்மிடமிருந்து ஓர் அருட்கொடையாகவும், உனக்கு எமது முன்னிலையிலிருந்து ஒரு கருணையாகவும் வழங்கியுள்ளோம். 

இறைவன் சாட்சியாக! துன்பத்திலோ, துக்கத்திலோ அவதியுறும் ஒருவன், பூரண  உண்மை உள்ளத்துடன், இந் நிருபத்தை வாசிப்பானாயின் கடவுள் அவனது துயரைப் போக்கி, இடர்களைக் களைந்து, இன்னல்களையும் அகற்றுவார். 

மெய்யாகவே அவரே கருணையாளர்; இரக்கக் குணமுடையவர். உலகங்களுக்கெல்லாம் அதிபதியாகிய இறைவனுக்கே போற்றுதல் உரியதாகுக.

-Bahá'u'lláh
-----------------------

